7 இடங்களில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மறியல் போராட்டம் 1,380 பேர் கைது


7 இடங்களில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மறியல் போராட்டம் 1,380 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2017 4:15 AM IST (Updated: 8 Sept 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 1,380 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தை தொடங்கினார்கள். இதனால் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் உள்பட பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடின. இதேபோல் சில ஆசிரியர் சங்கங்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. கணிசமான ஆசிரியர் சங்கங்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதையொட்டி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கனகராஜ் உள்பட பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 255 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி-பென்னாகரம்

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று பாப்பிரெட்டிப்பட்டி- தர்மபுரி சாலையில் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 167 பேரை போலீசார் கைது செய்தனர்.

பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் லட்சுமணன் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், அரசு, ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது கூட்டமைப்பினர் திடீரென மறியலில் ஈடுபட முயன்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 151 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரிமங்கலம்- நல்லம்பள்ளி

காரிமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் திருகுமரன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒன்றிய பொருளாளர் புலிக்குட்டி வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் புஷ்பலதா, ஈஸ்வரி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட முயன்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 215 பேரை போலீசார் கைது செய்தனர்.

நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிரணி நிர்வாகி கவிதா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் லில்லிபுஷ்பம், காவேரி, ஸ்ரீதர், சரவணன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சரவணன், பிரான்சிஸ்சேவியர், செல்வம், முருகன், காவேரி, மதலைமுத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஈடுபட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 117 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரூர்-பாலக்கோடு

அரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கூட்டமைப்பு நிர்வாகி கந்தசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வீரமணி, சாமிநாதன், தமிழ்மணி, அசோகன் உள்பட ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் உள்பட 374 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோன்று பாலக்கோடு தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 101 பேரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 1,380 பேரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story