கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல்


கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Sept 2017 4:30 AM IST (Updated: 8 Sept 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதையொட்டி நேற்று பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் உள்ளிட்ட 132 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 7-வது ஊதியக்குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தும் வரை 1-1-2016 முதல் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இந்த மறியல் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ஆளவந்தார், ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், அருள்ஜோதி மற்றும் தயாளன், குமரி அனந்தன், மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் சங்கம், சத்துணவு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்டவை பங்கேற்றன.

இதற்கிடையே மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 116 பேரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். கைது செய்யப்பட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பெரம்பலூரில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை பின் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினரும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட ஓய்வூதியர்கள் 16 பேரை போலீசார் கைது செய்து பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் தங்க வைத்தனர். மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளதால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சில அரசு அலுவலகங்கள் மற்றும் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. 

Related Tags :
Next Story