உயிர் தப்பியது எப்படி? காயம் அடைந்த பஸ் டிரைவர் பேட்டி


உயிர் தப்பியது எப்படி? காயம் அடைந்த பஸ் டிரைவர் பேட்டி
x
தினத்தந்தி 8 Sept 2017 4:30 AM IST (Updated: 8 Sept 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

பஸ்நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிர் தப்பியது எப்படி? என்று காயம் அடைந்த பஸ் டிரைவர் சண்முகம் கூறினார்.

கோவை,

சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த அரசு பஸ் டிரைவர் சண்முகம் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து டிரைவர் சண்முகம் கூறியதாவது:-

நான் கோவையில் இருந்து சோமனூர் செல்லும் 90-ஏ அரசு பஸ்சில் டிரைவராக உள்ளேன். சோமனூர் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்சை ஓட்ட முயன்றேன். அப்போது திடீரென்று ‘டமார்’ என்ற சத்தத்துடன் பஸ் நிலைய மேற்கூரை இடிந்து எனது பஸ்சின் மீது விழுந்து அமுக்கியது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது. நான் உடனடியாக கீழே குதித்து தப்ப முயன்றேன். இருந்தாலும் கட்டிட இடிபாடுகளுக்குள் கைகள் சிக்கியதால் காயம் அடைந்தேன்.

இடிபாடுகளுக்குள் சிக்கிய கண்டக்டர் சிவக்குமார் பரிதாபமாக இறந்து போனார். நான் காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பினேன். பஸ் நிலைய வளாகத்துக்குள் காத்திருந்த ஏராளமான பயணிகள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி அபய குரல் எழுப்பியதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

உயிர் தப்பிய மற்றொரு பஸ் டிரைவர் ராஜாராம் கூறும்போது, ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் கட்டிடத்தில் மழைநீர் தேங்கி ஈரப்பதத்துடன் இருந்துள்ளது. இதனால் திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து மயக்கம் அடைந்தேன். நல்ல வேளையாக உயிர் தப்பினேன்’ என்று கூறினார்.

Next Story