4 இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் 1,173 பேர் கைது


4 இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் 1,173 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2017 4:30 AM IST (Updated: 8 Sept 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில், தென்காசி உள்பட 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,173 பேர் கைது செய்யப்பட்டனர்.

சங்கரன்கோவில்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடவேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

சங்கரன்கோவில் பயணியர் விடுதி முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ராஜையா, மாரிமுத்து, வேல்முருகன், மூக்கையா ஆகியோர் தலைமை தாங்கினர். வேல்ராஜ், மோகன்ராஜ், வினோத், மரியாள், ரத்தினம், கருப்பசாமி, பூமாரி, சத்தியநாராயணன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதனால் சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றினர். அப்போது ஆசிரியர் ஒருவரை போலீசார் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் சமரசம் அடைந்தனர். மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 348 பேரை சங்கரன்கோவில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் கமலாதேவி மற்றும் போலீசார் கைது செய்தனர்.

வாசுதேவநல்லூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ சிவகிரி வட்டக்கிளையின் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த ராஜ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஈஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சுயம்புலிங்கம் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை சிக்கந்தர்பாபா பேசினார். வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாடசாமி, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு செல்வ சிதம்பரக்குமார், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் ராசு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் செந்தில்நாயகம், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் சவுந்தர்ராஜன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எஸ்.எம்.மாடசாமி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி புளியங்குடி ஆறுமுகவேலு ஆகியோர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து உரையாற்றினர்.

வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கசேகர் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட 34 பெண்கள் உள்பட 74 பேரை கைது செய்து வாசுதேவநல்்லூர் நகர பஞ்சாயத்து சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர்.

தென்காசியில் யூனியன் அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சண்முக சுந்தரம், முதுகலை ஆசிரியர் சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் சதீஷ், உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் பிச்சை கனி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் சரவணன், மேல்நிலை கணினி ஆசிரியர் சங்க தலைவர் செல்வக்குமார், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கணேசன், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சேதுராஜ் ஆகியோர் பேசினர். மாவட்ட துணை தலைவர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார். மறியலில் ஈடுபட்ட 514 பெண்கள் உள்பட 631 பேரை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

அம்பை தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ வட்ட கிளை தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். ஜியோ வட்ட கிளை தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலக சங்க மாவட்ட தலைவர் பழனி, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த தளவாய், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த காமராஜ், ஏசாராஜ், நகர பஞ்சாயத்து பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் அல்லாபிச்சை, ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் கமலேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 77 பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், அம்பை ஆகிய 4 இடங்களில் நடந்த சாலை மறியலில் மொத்தம் 1,173 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர். 

Related Tags :
Next Story