குளச்சலில் குப்பை கொட்ட எதிர்ப்பு; நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு


குளச்சலில் குப்பை கொட்ட எதிர்ப்பு;    நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 8 Sept 2017 4:30 AM IST (Updated: 8 Sept 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் பள்ளிமுக்கு சந்திப்பில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கொட்டும் மழையில் நகராட்சி வாகனத்தை சிறைபிடித்து, கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குளச்சல்,

குளச்சல் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் களிமார் உப்பளம் பகுதியில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் உப்பளம் பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு அந்தபகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 6  மாதங்களாக இந்த குப்பை கொட்டும் பிரச்சினையில் தீர்வு ஏற்படவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குப்பை கொண்டு சென்ற நகராட்சி வாகனங்களை அந்தபகுதி மக்கள் சிறை பிடித்தனர். இதனால் நகராட்சி பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் முக்கிய சந்திப்பு, வீதிகளில் குவிந்து கிடக்கிறது. இதனை தினமும் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று குளச்சல் பள்ளிமுக்கு சந்திப்பில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்காக ஒரு வாகனம் சென்றது. அது குப்பையை கொட்டிவிட்டு திரும்பிய போது அந்த பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் குப்பையை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை சிறை பிடித்தனர். அத்துடன், கொட்டப்பட்ட குப்பையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என போராட்டம் நடத்தினர்.   

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி பொறியாளர் சுரேஷ், சுகாதார அலுவலர் மாதவ ராஜ்குமார், குளச்சல் போலீசார் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சுமுக தீர்வு ஏற்படவில்லை. இதனால் பொதுமக்கள் அங்கு கஞ்சி காய்க்கும் போராட்டம் நடத்தினர். அப்போது மழை பெய்ய தொடங்கியது. என்றாலும் கொட்டும் மழையிலும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளிமுக்கு பகுதியில் இனிமேல் குப்பை கொட்டப்படாது என்றும், கொட்டப்பட்ட குப்பை அகற்றப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story