மகன் தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்ததால் தம்பதி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


மகன் தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்ததால் தம்பதி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 8 Sept 2017 5:15 AM IST (Updated: 8 Sept 2017 3:11 AM IST)
t-max-icont-min-icon

மகன் தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்ததால் தம்பதியினர் தற்கொலை செய்துகொண்டனர். அவர்கள் எழுதி வைத்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது.

அடிமாலி,

அடிமாலி இரும்புபாலம் அருகே உள்ள தேவியார் 20 சென்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 69). இவருடைய மனைவி சரோஜினி (60). இவர்களுக்கு சஜி, சாபு ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணமாகிவிட்டது. இதில் சாபு வீட்டில் சந்திரனும், சரோஜினியும் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் சாபு தனியாக வீடு கட்டி மனைவியுடன் வசிக்க திட்டமிட்டார். தாய்-தந்தையை அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்க வைக்கவும் முடிவு செய்தார். இதனால் சந்திரனும் அவருடைய மனைவியும் மன உளைச்சலில் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி சந்திரன் வீட்டின் பின்பக்கம் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சரோஜினி கை நரம்பை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்தார். அடுத்த நாள் காலையில் சாபு எழுந்து பார்த்த போது தாய், தந்தை இருவரும் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அடிமாலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டில் போலீசார் சோதனையிட்ட போது, தற்கொலைக்கான காரணம் குறித்து சரோஜினி எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.

அதில், வயதான காலத்தில் எங்களை தனியாக தவிக்கவிட்டு சாபு தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்துள்ளார். இது எங்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எங்களை இனி கவனிக்க யாரும் இல்லை.

எனவே நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம் என கூறப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story