திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்க குவிந்தவர்களால் பரபரப்பு


திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்க குவிந்தவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Sept 2017 3:26 AM IST (Updated: 8 Sept 2017 3:25 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்க குவிந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

வீரபாண்டி,

தமிழகம் முழுவதும் கடந்த 1-ந்தேதி முதல் வாகனங்கள் ஓட்டுபவர்கள் கையில் அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் கடந்த 5-ந்தேதி வரை அசல் உரிமம் வைத்திருப்பதற்கு விலக்கு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் அசல் உரிமம் இல்லாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து இதுவரை ஓட்டுனர் உரிமம் இல்லாதவர் களும், ஏற்கனவே ஓட்டுனர் உரிமம் பெற்று அசல் உரிமத்தை தொலைத்து நகல் உரிமத்தை வைத்திருப்பவர்கள் என ஏராளமானோர் தினமும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சென்று அசல் ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பிக்கின்றனர். ஒரே நாளில் ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் தற்போது ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்வதாலும் தமிழகம் முழுவதும் ஒரே இணையதளம் என்பதாலும் மிகவும் மெதுவாகவே இயங்கி வருகிறது. இதனால் ஓட்டுனர்களின் வசதிக்காக விடுமுறை நாளான 2-வது சனிக்கிழமை (நாளை) தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு விடுமுறை இல்லை என்றும், அன்று வழக்கம் போல இயங்கும் என்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் அறிவித்துள்ளார். எனவே அசல் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கிறவர்கள் வரும் சனிக்கிழமையையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story