அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல்


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல்
x
தினத்தந்தி 8 Sept 2017 3:35 AM IST (Updated: 8 Sept 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டத்தில் வேலைநிறுத்தம் செய்து மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.

வாடிப்பட்டி,

தமிழகம் முழுவதும் புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்துசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மதுரை மாவட்டத்திலும் நடந்தது.

மதுரையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலகம் முன்பு அந்த அமைப்பினை சேர்ந்தவர்கள் நேற்று காலை திரண்டனர். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் முருகன், சந்திரன், சுப்பையன், நாகராஜன் தலைமையில் ஊர்வலமாக சென்று திருவள்ளுவர் சிலை முன்புள்ள பிரதான சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை. இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 230 பெண்கள் உள்பட 703 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

இதற்கிடையே ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமையில் ஜாக்டோ- ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 61 பேரை கைது செய்தனர்.

உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு உசிலம்பட்டி, சேடபட்டி, செல்லம்பட்டி ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் ஜெகதீசன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் முருகன், பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பின்னர் உசிலம்பட்டியில் உள்ள பேரையூர் சாலையில் பஸ்மறியலில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 353 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.

வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ததோடு மதுரை-திண்டுக்கல் சாலையில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் வீரமலை தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடுவருவாய்துறை சங்கம், வேளாண்மைத்துறை சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம், நெடுஞ்சாலைத்துறை சங்கத்தை சேர்ந்த 30 பெண்கள் 43ஆண்களை வாடிப்பட்டி போலீசார் கைது செய்து அங்குள்ள திருமணமண்டபத்தில் தங்க வைத்தனர். மாலை விடுவிக்கப்பட்டனர்.

மேலூரில் தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் ஜெயராமேஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் சாலை மறியல் செய்ய முயன்றனர். அவர்களை தடுத்து போலீசார் 300 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மாவட்டத்தில் உள்ள 5715 அரசுப்பள்ளி ஆசிரியர்களில் 622 பேர் மட்டுமே நேற்று பணிக்கு வராமல் வேலைநிறுத்தப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதேபோல, பள்ளிக்கல்வித் துறையை சேர்ந்த ஆசிரியரல்லாத பணியாளர்கள் 848 பேரில் 33 பேர் மட்டுமே பணிக்கு வராமல் போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் வழக்கம்போல செயல்பட்டன.

Next Story