சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைச்சாலையில் நிலச்சரிவு; ராட்சத பாறை விழுந்தது போக்குவரத்து பாதிப்பு


சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைச்சாலையில் நிலச்சரிவு; ராட்சத பாறை விழுந்தது போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 8 Sept 2017 4:19 AM IST (Updated: 8 Sept 2017 4:18 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதில், ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சின்னமனூர்,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை உள்ளது. இங்கு தென்பழனியில் இருந்து ஹைவேவிஸ் வரை சுமார் 36 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் ஹைவேவிஸ் மலைச்சாலையில் தமிழன்காடு என்னுமிடத்தில் நேற்று காலை 9 மணிக்கு திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராட்சத பாறை ஒன்று உருண்டு வந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் ஹைவேவிஸ் செல்லும் மலைச்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத பாறையை வெடி வைத்து தகர்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. சின்னமனூரில் இருந்து மலைக்கிராமங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
சாலையின் குறுக்கே விழுந்த பாறை முழுவதும் வெடி வைத்து உடைத்து பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து ஹைவேவிஸ் மலைச்சாலையில் போக்குவரத்து சீர்செய்யப்பட்டு வாகனங்கள் செல்ல தொடங்கின.

Next Story