இதுவரை மின் வசதி இல்லாத 30 கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை


இதுவரை மின் வசதி இல்லாத 30 கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Sept 2017 4:40 AM IST (Updated: 8 Sept 2017 4:40 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் இதுவரை மின் வசதி இல்லாத 30 கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கர்நாடகத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 5 கிராமங்களை மாதிரி கிராமங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு ‘பெலகு’(விளக்கு) கிராமம் என்று பெயர் சூட்டியுள்ளோம். மாநிலம் முழுவதும் மொத்தம் 946 கிராமங்கள் தேர்ந்து எடுக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் அந்த கிராமங்களில், நகரங்களில் உள்ள மின் வசதிகளை போல் செய்து கொடுக்கப்படும். சிறப்பான மின் கட்டமைப்பு பணிகள் செய்யப்படும்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை செலவாகும். இதற்கு மொத்தம் ரூ.378 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் மாதிரி துணை கோட்டங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் மின்வெட்டு இன்றி தொடர்ந்து மின்சார வினியோகம் செய்தல், மின்சாரம் கசிவதை தடுப்பது, 100 சதவீத மின் கட்டணத்தை வசூலிப்பது, வாடிக்கையாளர்களுக்கு முழுமையான திருப்தியை அளிப்பதுதான் நோக்கம் ஆகும்.

எச்.டி., எல்.டி. மின் வயர்கள் பூமிக்கு அடியில் அமைப்பது, திறன்மிகு மீட்டர்களை பொருத்துவது, துணை மின் நிலையங்களை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். முதல்கட்டமாக 28 நகர துணை கோட்டங்களை தேர்வு செய்துள்ளோம். இந்த பணிகளின் மொத்த மதிப்பு ரூ.3,850 கோடி ஆகும். இந்த பணிகள் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்படும்.

அடுத்ததாக தீனதயாள் உபாத்யா கிராம ஜோதி திட்டத்தின் கீழ் இதுவரை மின்சார வசதி பெறாத 30 கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் ரூ.23.18 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். எல்.இ.டி., தெருவிளக்குகள், புதிய மின்மாற்றிகள், உயர் மின் அழுத்த நிலையங்கள் அமைக்கப்படும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 7.57 லட்சம் குடும்பங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு ரூ.228 கோடி செலவாகும்.

விவசாய பம்பு செட்டுகள் மற்றும் கிராமப்புறங்களில் குடியிருப்புகளுக்கு மின் பாதையை தனியாக அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.729 கோடி செலவாகும். ஒருங்கிணைந்த மின் வினியோக திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் மக்கள் தொகையை கொண்டுள்ள 222 சிறிய நகரங்களில் மின்சார கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.1,144 கோடி செலவாகும்.

பெங்களூருவில் கனமழை பெய்து வருவதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து மின் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக எச்.எஸ்.ஆர்.லே–அவுட், கோரமங்களாவில் சுமார் 100 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் தரை தளத்தில் தண்ணீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கட்டிடங்களில் மின் மீட்டர்கள் தரைதளத்தில் இருக்கிறது. அதனால் தண்ணீர் வடியும் வரையும் அந்த கட்டிடங்களுக்கு மின்சாரம் கிடைக்காது.

மேலும் பல்வேறு பகுதிகளில் மின் மீட்டர்கள் தரைத்தளத்தில் தான் வைக்கப்பட்டுள்ளது. அதிக மழை பெய்யும்போது அந்த மீட்டர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதனால் மின்சார வினியோகமும் பாதிக்கப்படுகிறது. எனவே, தரைத்தள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள மின் மீட்டர்களை முதல் மாடியிலோ அல்லது உயரத்திலோ வைக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். இதுகுறித்து சம்பந்தப்பட்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

தற்போது நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அணைகளில் ஓரளவுக்கு தண்ணீர் உள்ளது. முன்னெச்சரிக்கையாக 1,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story