உழவர்கரை நகராட்சியில் 6 வார்டுகளில் திறந்தவெளி கழிப்பறை இல்லை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
உழவர்கரை நகராட்சியில் 6 வார்டுகளில் திறந்தவெளி கழிப்பறை இல்லை என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கத்தின் முதலாவது நோக்கமானது இந்தியா முழுவதும் திறந்தவெளி கழிப்பறையை முற்றிலும் அகற்றுவதாகும். அதன்படி புதுச்சேரி அரசும், மத்திய அரசும் இணைந்து திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாநிலமாக புதுவை விளங்குவதற்கு ஏதுவாக கழிப்பறை இல்லாத வீடுகளில் கழிப்பறை கட்ட பயனாளிகளுக்கு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்கி வருகிறது.
கழிப்பறை இல்லாத வீடுகளில் கழிப்பறை கட்டுவதற்கான பணி நடந்துவரும் நிலையில் இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் உழவர்கரை நகராட்சி எல்லையில் உள்ள 6 வார்டுகளான அரசு குடியிருப்பு, லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம், பிருந்தாவனம், சண்முகாபுரம் மற்றும் கவுண்டன்பாளையம் வார்டுகளில் எந்த பகுதியிலும் திறந்தவெளியில் கழிப்பறை உபயோகிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த 6 வார்டுகளும் தூய்மை இந்தியா இயக்கத்தின் வழிமுறைகளின்படி திறந்தவெளி கழிப்பறை இல்லாத வார்டுகளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த வார்டுகளில் உள்ள பொதுமக்கள் யாருக்காவது இதுகுறித்து ஆட்சேபனை அல்லது ஆலோசனை இருக்குமாயின் அது தொடர்பான கருத்துகளை உரிய தகவல்களோடு உழவர்கரை நகராட்சி ஆணையருக்கு எழுத்து மூலமாக 15 தினங்களுக்குள் தெரிவிக்கலாம்.
குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுமக்களிடமிருந்து எந்த கருத்தும் வரவில்லை என்றால் இந்த 6 வார்டுகளும் திறந்தவெளி கழிப்பறை இல்லாத வார்டுகளாக இறுதி தீர்மானம் பிறப்பிக்கப்பட்டு திறந்தவெளி கழிப்பறை இல்லாத வார்டுகளாக அறிவிக்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.