செய்யூர் அருகே 2 பேர் கொலை வழக்கில் மேலும் 10 பேர் கைது
இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் அருகே உள்ளது கடப்பாக்கம் குப்பம், ஆலம்பர ஊத்துகாட்டு அம்மன் குப்பம். இங்கு உள்ளவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்கு இரு தரப்பினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த வாரம் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கடப்பாக்கம் குப்பத்தை சேர்ந்த சேகர் (வயது 35), ராமகிருஷ்ணன் (34) ஆகியோர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். 15 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையொட்டி அந்த பகுதியில் பதற்றம் நிலவியதால் 500–க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கில் போலீசார் 14 பேரை கைது செய்தனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் போலீசார் கொலை வழக்கில் தொடர்புடைய ஆலம்பர ஊத்துக்காட்டு அம்மன் குப்பத்தை சேர்ந்த பஞ்சநாதன் (60), ஆதிகேசவன் (37), இளம்பருதி (34), பிரதீப்குமார் (34) மதன் (29), சுமன் (25), தரணி (30), கபிலன் (38) சுரேந்தர் (27), நடராஜ் (28) ஆகியோரை கைது செய்தனர்.