‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி பா.ம.க. சார்பில் போராட்டம்
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி விரைவில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது என்று மாநில தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
திருவண்ணாமலை,
விழுப்புரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற உள்ள சமூகநீதி மாநாடு குறித்த பொறுப்பாளர்களுக்கு இடையேயான ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார்.முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வருகிற 17–ந் தேதி தியாகிகள் தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் பா.ம.க. சார்பில் சமூக நீதி மாநாடு நடைபெற உள்ளது. இது மாநில அளவிலான மாநாடாகும். இந்த மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையையும், மாற்றத்தையும் உண்டாக்கும் வகையில் இருக்கும். இது அனைத்து பிரிவினருக்கும் உரிய இட ஒதுக்கீட்டினை வழங்கிடக் கோரி நடக்கிறது.
தமிழகத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக குளறுபடி நடந்து வருகிறது. மாணவி அனிதாவின் மரணம் ‘நீட்’ தேர்விற்கு சாவு மணி அடித்து உள்ளது. அனிதாவின் மரணம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி விரைவில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.12 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட வில்லை. இந்த சூழ்நிலையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு நிகரான நீட் தேர்வை தமிழக மாணவர்களால் எவ்வாறு கையாள முடியும். தமிழகத்தில் பெரும்பாலானோர் ஏழை, எளிய வகுப்பை சேர்ந்தவர்களே. அவர்கள் எவ்வாறு பல லட்சம் ரூபாய் செலவு செய்து பயிற்சி எடுத்து நீட் தேர்வு எழுத முடியும்.
இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். மேலும் தமிழகத்தில் நிரந்தரமாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். தமிழகத்தில் 5 முறை பாடத்திட்டம் செயல்படுகிறது. இவற்றை ஒன்றிணைத்து சி.பி.எஸ்.இ. பாடத்திற்கு நிகரான சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வர வேண்டும்.திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்நிலைகள் தூர்வார வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேலும் பாலாறு, தென்பெண்ணை, காவிரி போன்றவற்றின் குறுக்கே தடுப்பணைகளை அரசு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.