காட்பாடி வி.ஜி.ராவ் நகரை சூழ்ந்த மழைவெள்ளம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
காட்பாடி வி.ஜி.ராவ்நகரை மழைவெள்ளம் சூழ்ந்துள்ளதால் அதனை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்பாடி,
வேலூரில் கடந்த சில நாட்களாக இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வேலூர் கன்சால்பேட்டை பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் தவித்து வருகின்றனர். மழைநீரை அப்புறப்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேபோல, காட்பாடி பகுதியில் பெய்த மழையினால் வி.ஜி.ராவ் நகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. நடந்து செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:–
வி.ஜி.ராவ் நகரில் 800–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்த பகுதியில் கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைநீர் வடிய வழியில்லாமல் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கூறினால், உங்கள் பகுதி தாழ்வான பகுதி என்று புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் தட்டிக் கழிக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த பகுதியில் மழைநீர் தேங்குகிறது. செங்குட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழைநீர் இங்கு வந்து சேர்கிறது. எங்கள் பகுதியில் உள்ள பிரதான கால்வாயும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது.
இந்த பகுதியில் 3 பள்ளிகள் உள்ளது. பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவ– மாணவிகள் தவிக்கின்றனர். மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுத்தொல்லையும் அதிகமாக காணப்படுகிறது.இதனால் நோய்கள் பரவும் அபாயம் காணப்படுகிறது. ஒரு குழந்தை இந்த தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சென்று அந்த குழந்தையை காப்பாற்றினார்கள். இதனால் குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கும் பயமாக உள்ளது. மழைநீரில் இரு சக்கர வாகனங்கள் மூழ்கி பழுதாகிறது. ஆபத்து காலங்களில் மருத்துவமனைக்கு செல்ல வாடகைக்கு ஆட்டோக்களை அழைத்தால் ஆட்டோ டிரைவர்கள் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதை காரணமாக கூறி வர மறுக்கிறார்கள். ஆங்காங்கே சாலையில் உள்ள பள்ளங்கள் மழைநீரில் மூழ்கி உள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழும் நிலை உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.