டாஸ்மாக் கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
கீழ்அரசம்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கணியம்பாடி,
கணியம்பாடி ஒன்றியம் கீழ்அரசம்பட்டு கிராமத்தில் நாய்க்கன்பாளையம் தெருவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்த டாஸ்மாக் கடையால் இப்பகுதி மக்கள், பெண்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவிகள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்களும் மகளிர் குழுவினரும் ஏற்கனவே பலமுறை வேலூர் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர். ஆனால் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மகளிர் குழுவினர் மற்றும் பெண்கள் கடந்த மாதம் 24–ந் தேதி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.அப்போது வேலூர் தாலுகா போலீசார் பொதுமக்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் கடையை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது கடையை மூடிவிட்டு விற்பனையாளர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
தொடர்ந்து நேற்று நண்பகல் 12 மணி அளவில் மீண்டும் கடை திறக்கப்படும் என்று தகவல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒரு மணி நேரம் ஆகியும் யாரும் கடையை திறக்க வராததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story