தாமிரபரணி–கருமேனியாறு–நம்பியாறு இணைப்பு திட்டம் குறித்து ஆய்வு கூட்டம்
தாமிரபரணி–கருமேனியாறு–நம்பியாறு இணைப்பு திட்டம் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.
திசையன்விளை,
தாமிரபரணி–கருமேனியாறு–நம்பியாறு இணைப்பு திட்டம் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.
ஆய்வு கூட்டம்தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டம் குறித்து சிறப்பு ஆய்வு கூட்டம் திசையன்விளை நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். இன்பதுரை எம்.எல்.ஏ., சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:–
ரூ.772 கோடிவெள்ளநீர் கால்வாய் திட்டம் ரூ.772 கோடியில் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலில் வீணாக சென்று கலக்கும் மழைநீரை வறட்சி பகுதிகளான ராதாபுரம், திசையன்விளை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்வது ஆகும்.
இந்த திட்டத்தின் மூலம் இப்பகுதி மக்கள் அதிகமாக பயன் அடைவார்கள். இந்த திட்டத்தை 4 பகுதிகளாக பிரித்து 2 நிலைகளில் 50 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. மீதமுள்ள பணிகள் 6, 7 மாதங்களில் முடிவடையும். 3–வது நிலைக்கு 2 ஆயிரம் ஹெக்டர் நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது. இந்த நிலம் கையகப்படுத்தும் பணிகள் 3 மாதத்தில் நிறைவடையும். 3–வது நிலையில் பணிகள் முடிந்ததும் நம்பியாறு அணை வரை தண்ணீர் கொண்டு வரப்படும். இந்த திட்டம் மூலம் 23 ஆயிரம் ஹெக்டர் நிலம் பாசன வசதி பெறும்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், பயிற்சி கலெக்டர் இளம்பகவதி, ராதாபுரம் தாசில்தார் ரவிக்குமார், நதிநீர் இணைப்பு திட்ட தாசில்தார்கள் இருதயராஜ், மாரிமுத்து, திசையன்விளை கிராம நிர்வாக அலுவலர் குமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.