பிரசவத்தில் இளம்பெண் சாவு தவறான சிகிச்சையில் அவர் இறந்ததாக தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் மீது புகார்


பிரசவத்தில் இளம்பெண் சாவு தவறான சிகிச்சையில் அவர் இறந்ததாக தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் மீது புகார்
x
தினத்தந்தி 9 Sept 2017 2:00 AM IST (Updated: 8 Sept 2017 9:06 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் இளம்பெண் உயிரிழந்தார்.

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் இளம்பெண் உயிரிழந்தார். தவறான சிகிச்சையில் அவர் இறந்ததாக தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் மீது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருமணமான ஓராண்டில்...

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியைச் சேர்ந்தவர் ஜகுபர் சாதிக் (வயது 36). இவர் நெல்லையில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், விளாத்திகுளம் அருகே உள்ள வடமலை சமுத்திரத்தைச் சேர்ந்த செய்யதலி காதர் நிஷாவுக்கும் (33) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது.

தலைப்பிரசவம்

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த செய்யதலிகாதர் நிஷாவை, கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைபிரசவத்துக்காக வடமலை சமுத்திரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

பின்னர், விளாத்திகுளம் தனியார் ஆஸ்பத்திரியில் அவர் தொடர்ந்து பரிசோதனை செய்து வந்தார். கடந்த 6–ந்தேதி இரவில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. எனவே, அவரை பிரசவத்துக்காக, விளாத்திகுளத்திலுள்ள அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லாததால், அங்கிருந்த செவிலியர் தொலைபேசியில் டாக்டரை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் செவிலியர், அவருக்கு 2 ஊசிகளை போட்டதாக கூறப்படுகிறது.

இளம்பெண் சாவு

பின்னர், மறுநாள் அதிகாலையில் ஆஸ்பத்திரிக்கு வந்த டாக்டர், அவருக்கு அறுவை சிகிச்சை செய்தார். இதில் செய்யதலி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து டாக்டரின் தவறான சிகிச்சையில்தான் அவர் இறந்ததாக புகார் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து கணவர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து ஜகுபர் சாதிக் விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உடனே போலீசார் விரைந்து சென்று தனியார் ஆஸ்பத்திரியில் இருந்த அவருடைய உடலைக் கைப்பற்றி, பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நேற்று மாலையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய கணவர் கொடுத்துள்ள புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story