நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவ–மாணவிகள் 258 பேர் கைது


நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவ–மாணவிகள் 258 பேர் கைது
x
தினத்தந்தி 9 Sept 2017 4:45 AM IST (Updated: 8 Sept 2017 9:40 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவ–மாணவிகள் 258 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்,

நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை கல்லூரி மாணவ–மாணவிகள் ஏராளமானோர் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக நடந்து சென்று தலைமை தபால் அலுவலகத்தில் முற்றுகையிட சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று கல்லூரி மாணவ–மாணவிகளை அச்சுந்தன்வயல் அருகே தடுத்து சமரசம் செய்தனர்.

அப்போது மாணவர்கள் ஊர்வலமாக சென்று முற்றுகையிட போவதாக தெரிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் மாணவ–மாணவிகள் அந்த இடத்திலேயே அமர்ந்து திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் 137 மாணவிகள் உள்பட 258 பேரை கைது செய்தனர்.


Next Story