உருவ பொம்மையை எரிக்க முயற்சி; புதிய தமிழகம் கட்சியினர் 22 பேர் கைது
காரைக்குடியில் உருவபொம்மையை எரிக்க முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி,
நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசிவருவதை தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சித்தற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போதுமாவட்ட செயலாளர் பாலா தலைமையில் அக்கட்சியினர் மு.க.ஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது தகவல் அறிந்து தி.மு.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகனி.செந்தில்குமார், நகர செயலாளர் குணசேகரன், வக்கீல் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து உருவ பொம்மையை எரிக்க முயன்ற புதிய தமிழகம் கட்சியினரை தடுத்து நிறுத்தி அக்கட்சியைச் சேர்ந்த 22 பேரை கைது செய்தனர்.