கோவை மாவட்டத்தில் 2–வது நாளாக வேலைநிறுத்தம்: கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டத்தில் நேற்று 2–வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை,
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் சங்கங்களின் கோவை மாவட்ட கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் நேற்று 2–வது நாளாக வேலைநிறுத்தம் செய்து போராட்டம் நடத்தினார்கள்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. ஆனாலும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று காலை கோவை வந்தனர். அவர்கள், சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அலுவலக நுழைவு வாயிலின் ஒரு பக்கம் ஜாக்டோ–ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் ஒரு வேனில் நின்று கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செய லாளர் ராஜசேகர், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் செந்தில்குமார், நீதித்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் கருணாகரன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் மாயவன், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் டி.வீரமணி, மண்டல செயலாளர் ப.ரமேஷ், கிளை தலைவர் ராபர்ட், செயலாளர் ஜெயக்குமார் உள்பட அனைத்து சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினார்கள்.
ஆர்ப்பாட்டம் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம், சத்துணவு ஊழியர்கள் சங்கம், வணிகவரித்துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலைத்துறை, கலலூரி கல்வித்துறை உள்பட 27 துறைகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தினால் அரசு அலுவலகங்களில் நேற்று 2–வது நாளாக பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் அரசு பள்ளிகளில் வகுப்புகளும் நடைபெறவில்லை.
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓரமாக நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அடுத்த கட்ட போராட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் சென்னையில் கலந்து பேசி அறிவித்தபின்னர் முடிவு செய்யப்படும் என்று போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.