விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மின் மோட்டார்கள் கலெக்டர் தகவல்


விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மின் மோட்டார்கள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 Sept 2017 4:00 AM IST (Updated: 9 Sept 2017 12:21 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மின் மோட்டார்கள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–

தேனி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் கூடிக்கொண்டே வருகிறது. மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மின் இணைப்பு பெறுவதற்கு மிக கால தாமதம் ஆகிறது. இதனால், விவசாயிகள் டீசல் என்ஜின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்ய வேண்டி உள்ளது. அல்லது, விவசாய பணிகளை மேற்கொள்வதை குறைத்தோ, மழையை எதிர்பார்த்தோ மேற்கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது.

விவசாயிகளின் நீர்ப்பாசன தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மரபுசாரா எரிசக்தி மூலமாக சூரிய மின் சக்தியில் இயங்கக்கூடிய மின் மோட்டார்கள் அரசு மானியத்துடன் வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் மின்வாரியத்தை எதிர்பார்த்து காத்திருக்காமலும், டீசல் செலவின்றியும், இயற்கையில் அதிக அளவில் கிடைக்கும் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் மோட்டார்களை பொருத்தி பயன்பெறலாம்.

எனவே விவசாயிகளிடம் தேவை அதிகம் உள்ள நிலையில், நடப்பு நிதியாண்டுக்கு மாநில அளவில் 1,000 விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மின்மோட்டார்கள் வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே இலவச மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வருபவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும் எனில் தாங்கள் பெற்று வரும் இலவச மின் இணைப்பை துறந்திட சம்மதிக்க வேண்டும். மேலும், மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ளவர்கள் அதனை திரும்பப்பெற்று, முன்னுரிமை பதிவில் இருந்து நீக்கிக் கொள்ள சம்மதிக்க வேண்டும்.

இதுபோன்ற விதிகளின் அடிப்படையில் மின்வாரியத்தின் மூலம் வழங்கப்படும் 30 சதவீதம் மானியத்தை சேர்த்து மொத்தம் 90 சதவீதம் மானியத்தில் சூரிய சக்தி மின் மோட்டார்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி விருப்ப மனு கொடுக்கலாம். அதன்பேரில், மின்வாரியத்தில் கொடுக்கப்படும் சான்றின் அடிப்படையில் சூரிய சக்தி மின் மோட்டார்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story