நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரிகளில் வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரிகளில் வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2017 4:30 AM IST (Updated: 9 Sept 2017 12:42 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திண்டுக்கல்லில் உள்ள கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்தது. ஆனால், இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதனால் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவ, மாணவிகளின் மருத்துவ படிப்பு கனவு நிறைவேறாமல் போனது. அவ்வாறு பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்தார்.

இதையடுத்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அதன்படி திண்டுக்கல்லிலும் நேற்று 3–வது நாளாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் அரசு எம்.வி.எம். மகளிர் கல்லூரியில் மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர்.

பின்னர் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோ‌ஷமிட்டனர். அதேபோல் திண்டுக்கல்–மதுரை சாலையில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வகுப்புகளை புறக்கணித்தனர். மேலும் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்திலும் பங்கேற்றனர்.

திண்டுக்கல்–நத்தம் சாலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் சில மாணவர்கள் திரண்டு சாலை மறியல் செய்ய முயன்றனர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சாலை மறியல் முயற்சியை தடுத்தனர். இதனால் மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story