அரசுக்கு பெரும்பான்மை இல்லை: கவர்னர் நல்ல முடிவை எடுப்பார் என காத்திருக்கிறோம் டி.டி.வி. தினகரன் பேட்டி
அ.தி.மு.க அம்மா கட்சி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று மதுரை விமான நிலையம் வந்தார்.
மதுரை,
அ.தி.மு.க. அம்மா கட்சி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள். எங்கள் அணி சார்பில் இன்று (9–ந்தேதி) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். அது ரத்து செய்யப்படுகிறது. தமிழகத்தில் சமூக நீதியை காப்பாற்றும் பொறுப்பு, மத்திய அரசுக்கு உள்ளது. நீட் தேர்வை கொண்டுவந்தது மத்திய அரசு. எனவே அவர்கள் அதை பரிசீலனை செய்து தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்று சட்டம் கொண்டுவர வேண்டும்.
முதல்வரை மாற்றும் முதல்கட்ட நடவடிக்கைதான், கவர்னருடனான சந்திப்பு. 21 எம்.எல்.ஏ.க்களுடன் சென்று கவர்னரை சந்தித்தேன். எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறியுள்ளேன். அவர் இறுக்கமாக நாற்காலியை பிடித்து வைத்துக்கொண்டுள்ளார். அவரை தூக்கி எறியத்தான் கவர்னரை சந்தித்தோம். கவர்னர் நல்ல முடிவை எடுப்பார் என நினைத்து காத்திருக்கிறோம்.
இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார்.