மதுரையில் பலத்த மழை; 2 மணி நேரம் கொட்டித்தீர்த்தது
மதுரையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மதுரை,
மதுரையில் அவ்வப்போது மழை பெய்து வந்த போதிலும், வெயிலின் தாக்கமும் அதிகமாகவே இருந்து வருகிறது. நேற்று காலையிலும் வெயில் கடுமையாக இருந்தது. இந்தநிலையில் மாலை 4 மணியளவில் கருமேகங்கள் ஒன்று திரண்டு மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன.
இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் நகரிலும், புறநகர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
திடீரென பெய்த இந்த மழையால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். மாலை வேளை என்பதால் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். பெரியார் பஸ் நிலைய பகுதியில் ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பெரியார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த பொதுமக்கள் சிறிதுநேரம் கண்காட்சி அரங்கத்திலேயே அமர்ந்து பின்னர் மழை குறைந்தவுடன் கிளம்பிச் சென்றனர். இதேபோல் பேரையூர், கள்ளிக்குடி, உசிலம்பட்டி, மேலூர் என மதுரை மாவட்டம் முழுவதிலும் பலத்த மழை பெய்தது.
தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் சூழ்நிலையில் நேற்று 2 மணி நேரமாக பெய்த மழை மதுரை மக்கள் மற்றும் விவசாயிகள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.