குடிநீர் லாரிகளில் அதிக ஒலி எழுப்பும் ‘ஹாரன்’ ஒலி மாசு கட்டுப்படுத்த கோரிக்கை


குடிநீர் லாரிகளில் அதிக ஒலி எழுப்பும் ‘ஹாரன்’ ஒலி மாசு கட்டுப்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 9 Sept 2017 4:15 AM IST (Updated: 9 Sept 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகரில் பெரும்பாலான குடிநீர் லாரிகளில் அதிக ஒலி எழுப்பும் ‘ஹாரன்’ பயன்படுத்தப்படுவதால் ஒலி மாசு ஏற்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விநாயகர் சதுர்த்தி மற்றும் போகி பண்டிகையின்போது நீர்நிலைகள் மற்றும் காற்று மாசு ஏற்படாமல் இருப்பதற்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறது. ஆனால் நீர்நிலைகளில் மாசு ஏற்படுவது தடுக்கப்படுவதில்லை என்ற குறை உள்ளது.
அதேபோல் மாநகரில் அதிக புகையை வெளியிடும் ஆயுட்காலம் முடிந்த பின்னரும் இயக்கப்படும் ஒருசில கனரக மற்றும் சிறிய வகை வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் அளவுக்கு அதிகமாக ஒலி எழுப்பும் ‘மின்னணு ஹாரன்’ கொண்ட குடிநீர் லாரிகளால் காற்று மற்றும் ஒலி மாசு அதிகரிக்கிறது. இதனால் சாலைகளில் செல்லும் ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக ஐகோர்ட்டு, மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இருக்கும் பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்துவதால் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. சில அரசு வாகனங்களிலேயே அதிக சப்தம் கொண்ட ஹாரன்கள் பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க தவறினால், தமிழக அரசை நாடப்போவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-
மாசு கட்டுப்பாட்டு வாரிய சட்டத்தின்படி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு ஹாரன்கள் 72 டெசிபல் அளவில் இருக்க வேண்டும். இந்த அளவு ஹாரன் உள்ள வாகனங்களால் சாலைகளில் செல்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. 100 டெசிபல் அளவுக்கு மேலே ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தியிருந்தால் சாலையில் செல்பவர்கள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படுகின்றனர். எனவே வாகன சோதனையின்போது அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை அப்புறப்படுத்துகிறோம்.

தொடர்ந்து அவ்வாறு பொருத்தினால் வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக இதுதொடர்பாக நூற்றுக்கணக்கான வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story