செய்யாறில் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் சாலை மறியல் 290 பெண்கள் உள்பட 500 பேர் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்யாறு,
செய்யாறு தாலுகா அலுவலகம் முன்பு செய்யாறு கோட்ட அளவிலான அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் அரசு ஊழியர் போராட்டத்திற்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை மீறி செய்யாறில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசிகொண்டு இருந்தனர்.
அப்போது ஒரு அமைப்பினர் மற்ற இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்துள்ளனர். அதேபோல் இப்பகுதியிலும் மறியலில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு மற்றொரு அமைப்பினர் ஊழியர்களின் பாதுகாப்பு சங்கத்திற்கு முக்கியம். மறியலில் ஈடுபடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று மாற்று கருத்தினை பதிவு செய்தனர்.
இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென செய்யாறு – ஆற்காடு சாலையில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலை கைவிட்டு கலைந்து செல்லும்படி பாதுகாப்பு பணியில் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், இன்ஸ்பெக்டர் சாரதி மற்றும் போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் பஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்று மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இப்போராட்டத்தில் 290 பெண் ஊழியர்கள் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.