நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் மாணவ-மாணவிகள் 5-வது நாளாக போராட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் மாணவ-மாணவிகள் 5-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2017 6:00 AM IST (Updated: 9 Sept 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி அனிதா தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தஞ்சையிலும் பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தஞ்சை பசுபதிகோவில் அருகே உள்ள ஸ்டார்லைன் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று பேரணியாக பழைய பஸ் நிலையம் வந்தனர். அவர்களுடன் நாட்டார் கல்லூரி, பூண்டி கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தலைமை தபால் நிலையம் நோக்கி பேரணியாக சென்றனர்.

தஞ்சை தலைமை தபால் நிலையத்திற்கு வந்த மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தமிழ்நாடு மாணவ இயக்க பொதுச்செயலாளர் பிரபாகரன், தமிழக மாணவ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பாரிமைந்தன், எட்வின், குணா, யாசர் தமிழ்பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் ஸ்ரீமான் இளையராஜா, ஜான் வின்சென்ட், பூண்டி கல்லூரி ரகுமான், நாட்டார் கல்லூரி அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை, தமிழர் தேசிய முன்னணியின் பொது செயலாளர் அயனாபுரம் முருகேசன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை செயலாளர் துரை. மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Next Story