‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரிக்கை சேலத்தில் மாணவ-மாணவிகள் ஊர்வலம்


‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரிக்கை சேலத்தில் மாணவ-மாணவிகள் ஊர்வலம்
x
தினத்தந்தி 9 Sept 2017 4:15 AM IST (Updated: 9 Sept 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்‘ தேர்வை ரத்து செய்யக்கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரியும்

சேலம்,

சேலத்தில் சமூக நீதிக்கான மாணவர், இளைஞர் கூட்டமைப்பு சார்பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இருந்தாலும் நேற்று காலை கூட்டமைப்பை சேர்ந்த திரளானவர்கள் சேலம் அரசு கலைக்கல்லூரி முன்பு திரண்டனர். அவர்களுடன் கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் பலர் சேர்ந்தனர். பின்னர் இவர்கள் கல்லூரி வளாகத்தில் திடீரென தர்ணா போ ராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலத்தின் போது மாணவ, மாணவிகள் பலர், ‘கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வா, மாநில உரிமைகளை நசுக்காதே‘, ‘மத்திய, மாநில அரசே ‘நீட்‘ தேர்வை ரத்து செய்‘, ‘நீதி வேண்டும் மாணவி அனிதாவுக்கு நீதி வேண்டும்‘ என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி சென்றனர்.

இந்த ஊர்வலம் செரி ரோடு, திருவள்ளுவர் சிலை வழியாக தலைமை தபால் நிலையம் முன்பு சென்றடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. சில மாணவ, மாணவிகள் அங்குள்ள சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பேசும் போது, ‘நீட்‘ தேர்வை ரத்து செய்வதாக மத்திய, மாநில அரசுகள் தமிழக மாணவர்களை தொடர்ந்து ஏமாற்றி வந்தது. மருத்துவம் படிப்பதற்கான அனைத்து தகுதியும் கொண்டிருந்த மாணவி அனிதா, அந்த வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகள் பதவி விலக வேண்டும். இந்த தேர்வை ரத்து செய்யும் வரை மாணவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்‘ என்றனர். ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story