சமுதாயத்தை பிளவுப்படுத்துவதில் பா.ஜனதா மும்முரம் காட்டுகிறது
‘‘சமுதாயத்தை பிளவுப்படுத்துவதில் பா.ஜனதா மும்முரம் காட்டுகிறது’’ என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.
நாந்தெட்,
மராட்டிய மாநிலம் நாந்தெட் நகரில் நேற்று காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அக்கட்சி துணை தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:–மத்திய அரசின் ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கை திருடர்களின் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றியது என்பதை ஒட்டுமொத்த நாடும் அறியும். முதலில், ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கை பயங்கரவாதத்தை தடுக்கும் என்றார்கள். பின்னர், கருப்பு பணத்தை மீட்போம் என்றார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், 90 சதவீத கருப்பு பணம் ரியல் எஸ்டேட் வணிகத்திலும், தங்கத்திலும் தான் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
மதிப்பு நீக்கம் செய்யப்பட்டதில் 99 சதவீத பணம் திரும்ப அரசு கருவூலத்துக்கு வந்திருக்கிறது என்று ஏறத்தாழ ஒரு ஆண்டு கழித்து ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. ஏன் இந்த தாமதம்?. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெகுவாக குறைந்திருக்கிறது. இதற்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு.
சமுதாயத்தை பிளவுப்படுத்துவதில் பாரதீய ஜனதாவும், பிரதமர் மோடியும் மும்முரமாக இருக்கிறார்கள். அரியானாவை பொறுத்தவரையில் ஜாட் இன மக்களுக்கும், ஜாட் அல்லாதோருக்கும் இடையே அவர்கள் (பா.ஜனதா) பிளவை ஏற்படுத்துகிறார்கள்.மராட்டியத்தில் மராத்தா இனத்தவருக்கும், மராத்தா அல்லாதோருக்கும் இடையே பிளவை ஏற்படுத்துகிறார்கள். பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதே அவர்களது ஒரே இலக்கு.
அவர்கள் ஊழல் பற்றி பேசுவார்கள். ஆனால், கோவாவிலும், மணிப்பூரிலும் சட்டசபை உறுப்பினர்களை விலைக்கு வாங்குவார்கள். இப்போது, குஜராத்திலும் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள்.மோடி பிரதமர் ஆனதும் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பேன் என்று உறுதியளித்தார். அதன்படி, 2 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 1 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளித்ததாக நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால், கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை வெறும் பூஜ்யம். அடுத்து காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.