தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 9 Sept 2017 4:07 AM IST (Updated: 9 Sept 2017 4:07 AM IST)
t-max-icont-min-icon

மலை கிராமங்களில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, அசோக்குமார் எம்.பி., சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்வியில் பின்தங்கிய மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தை வளர்ச்சி மாவட்டமாக மாற்றிட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மலை கிராமங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை போக்கிட ரூ. 7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். இதற்காக தமிழக அரசு முனைப்புடன செயல்படுகிறது. அதே வேளையில், மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு போட்டித் தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு 412 பயிற்சி மையங்கள் இந்த மாத இறுதிக்குள் அமைக்கப்படும்.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ரூ. 60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். 9, 10, 11, 12-ம் வகுப்புகள் ரூ.432 கோடி செலவில் கணினிமயமாக்கப்படும். மாணவர்களில் 10 சதவீதம் கற்றல் குறைபாடுகள் உள்ள மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு புதிய திட்டங்கள் மூலம் குறைபாடுகளை போக்கிட நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் முதுகலை ஆசிரியர்கள் 3,336 பேரும், கணினி ஆசிரியர்கள் 748 பேரும் பணியமர்த்தப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.முனிவெங்கட்டப்பன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபாலன், கல்வியாளர்கள் ராஜீவ்காந்தி மூர்த்தி, நந்தகுமார் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயகுமார், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் அகமதுபாஷா நன்றி கூறினார்.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காலாண்டு தேர்வு நடக்க உள்ள நிலையிலும், கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையிலும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது போன்ற நிலைமை வருகிற 11-ந் தேதிக்கு மேல் இருக்காது. ஆசிரியர் தகுதி தேர்வை பொறுத்தவரை வெயிட்டேஜ் மதிப்பெண் குறித்து, இரு வேறு கருத்துகள் நிலவி வருகிறது. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story