மருமகளை தற்கொலை தூண்டிய வழக்கில் மாமியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
புதுவையில் மருமகளை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
புதுச்சேரி,
புதுவை மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி சுமதி (வயது 42). இவர்களுடைய மகன் சபரிராஜன். இவர் கடந்த 2012–ம் ஆண்டு ஜோஸ்பின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து சபரிராஜன், ஜோஸ்பினுடன் மேட்டுப்பாளையம் பகுதியில் தனிக்குடித்தனம் சென்றனர்.
கடந்த 2013–ம் ஆண்டு மாமியார் சுமதி, ஜோஸ்பினை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். இதனால் மனமுடைந்த ஜோஸ்பின் வீட்டில் இருந்த மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையிலேயே ஜோஸ்பினிடம் குற்றவியல் நீதிபதி மரண வாக்குமூலம் பெற்றார்.
அதில் மாமியார் தன்னை திட்டி, தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்திருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி ஜோஸ்பின் உயிரிழந்தார். இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமதியை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி உதவி அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எழிலரசி முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட சுமதிக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி எழிலரசி தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முத்துவேல் ஆஜரானார்.