கடம்பத்தூரில் ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
கடம்பத்தூர் அருகேயுள்ள கசவநல்லாத்தூர் ஆஞ்சனேயபுரத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் ரமேஷ் (வயது25).
திருவள்ளூர்,
கடம்பத்தூர் அருகேயுள்ள கசவநல்லாத்தூர் ஆஞ்சனேயபுரத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் ரமேஷ் (வயது25). இவர் சென்னை பட்டரைவாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் ரமேஷ் வேலை முடிந்து இரவு சென்னையில் இருந்து ரெயில் மூலம் கடம்பத்தூருக்கு வந்தார். பின்னர் அவர் வீட்டிற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடந்தார். அப்போது அவர் செல்போனில் பேசியவாறு சென்றார். அந்தநேரத்தில் சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வந்தது.
இதைக்கண்ட அவருடன் நடந்து சென்றவர்கள் மற்றும் பொதுமக்கள் ரெயில் வருவதாக கூச்சலிட்டார்கள். ஆனால் செல்போனில் பேசியவாறு சென்றதால் அவர்களது கூச்சல் ரமேசின் காதில் விழவில்லை. கண்இமைக்கும் நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் பற்றி அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.