மணல் திருட்டை கண்டித்தவர்களுக்கு கொலை மிரட்டல்: போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்


மணல் திருட்டை கண்டித்தவர்களுக்கு கொலை மிரட்டல்: போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2017 5:24 AM IST (Updated: 9 Sept 2017 5:24 AM IST)
t-max-icont-min-icon

மணல் திருட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யக்கோரி வில்லியனூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வில்லியனூர்,

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் சங்கராபரணி ஆற்றில் மணல் அள்ள ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதையும் மீறி அந்த ஆற்றில் மணல் திருட்டு நடந்து வந்தது. இந்தநிலையில் கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மணல் திருட்டை நடக்க பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.இதையொட்டி கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு மணல் திருட்டு கும்பலால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதன் அமைப்பாளர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். மீண்டும் கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு, மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து கிராமப்புற இயக்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் அதன் தலைவர் சந்திரசேகர் தலைமையில் நேற்று இரவு வில்லியனூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மணல் கடத்தல் கும்பல் மீது ஓரிரு தினங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

அதனை ஏற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டம் காரணமாக வில்லியனூரில் பரபரப்பு காணப்பட்டது.

Next Story