காய்கறியும் ‘கவர்ச்சி’யும்


காய்கறியும் ‘கவர்ச்சி’யும்
x
தினத்தந்தி 9 Sept 2017 12:48 PM IST (Updated: 9 Sept 2017 12:48 PM IST)
t-max-icont-min-icon

காய்கறிகளுக்கு ‘கவர்ச்சிகரமான பெயர்களை’ கொடுப்பது அவற்றை உண்ண வழிவகுக்கும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

காய்கறிகள், பழங்கள் உண்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று தெரிந்தாலும், பலரும் காய்கறிகளை உண்ண ஆர்வம் காட்டுவதில்லை.

அப்படிப்பட்டவர்களை, அதிகம் காய்கறிகளை உண்ணவைப்பது எப்படி? 

ஸ்டான்போர்டில் உள்ள ஆராய்ச்சிக் குழு ஒன்று, பல்கலைக்கழக உணவகத்தில் காய்கறிகளுக்கு கவர்ச்சிகரமான பெயர்களை வைத்து விற்பனை செய்தது. அப்போது அவற்றின் விற்பனை 25 சதவீத அளவுக்கு உயர்ந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இலையுதிர் கல்விக் காலம் முழுவதிலும் மாணவர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் காய்கறிகள் நான்கு விதமான பெயர்களுடன் முன்வைக்கப்பட்டன. 

அதாவது, ‘கேரட்’ என்ற இயல்பான பெயர். 

கட்டுப்பாடுடன் கூடிய ஆரோக்கிய பெயர் ‘கேரட்டும் சர்க்கரை இல்லாத எலுமிச்சையும்’.

நேர்மறையான ஆரோக்கிய பெயர் ‘வைட்டமின் சி நிறைந்த கேரட்டுகள்’.

சுவாரசியமூட்டும் கவர்ச்சிகரமான பெயர் ‘அசத்தலான எலுமிச்சை கேரட்’.

இதேபோல பீட்ரூட், பட்டர்நட், சோளம், பச்சைப் பட்டாணி, வெள்ளரிக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு என அனைத்துக் காய்கறிகளும் கவர்ச்சிகரமான பெயர்களைக் கொண்டு, ஒரு வாரம் முழுக்க விற்பனை செய்யப்பட்டன.

ஒவ்வொரு நாளும் மாணவர்கள் எவ்வளவு காய்கறிகளை எடுத்தனர் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டனர்.

அவ்வாறு கணக்கிடப்பட்டதில், சுவாரசியமான பெயர்கள் வைத்த காய்கறிகள் முதலாவதாக இருந்தன. அதில், ‘தனித்துவமான பூண்டு இஞ்சிக் கலவையுடன் பட்டர்நட் சேர்த்த குடைமிளகாய்’, ‘காரசாரமான பச்சை மிளகாயுடன் புளிப்பு தூக்கலான பீட்ரூட்’ ஆகியவை அடங்கும்.

எனவே இம்மாதிரியான கவர்ச்சியான பெயர்களை வைத்த காய்கறிகள் இயல்பான பெயரை வைத்து விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளைக் காட்டிலும் 25 சதவீதமும், கட்டுப்பாடான ஆரோக்கிய உணவுகளைக் காட்டிலும் 41 சதவீதமும், நேர்மறையான ஆரோக்கிய பெயர் வைக்கப்பட்ட உணவைக் காட்டிலும் 35 சதவீதமும் அதிகமாக விற்பனையாகின. 

உணவைத் தேர்வு செய்வதற்கு அடிப்படையாக உள்ள மனப்போக்கைக் கருத்தில்கொண்டு இந்த ஆய்வைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலானோர் உணவின் சுவையைப் பொறுத்தே அதைத் தேர்வு செய்கின்றனர், பலர் ஆரோக்கியமான உணவு ருசியாக இருக்காது என நினைத்துக்கொள்கின்றனர் என கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

காய்கறிகளின் பெயர்கள், நாம் உணவைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றன. பெயரை வைத்தே அது எந்தளவு ருசியானது என்றும் மக்கள் தீர்மானிக்கின்றனர்.

‘‘எனவே நாங்கள் காய்கறிகளுக்கு சுவாரசியமான பெயர்களை வைக்கத் தீர்மானித்தோம். நாம் நிறைய காய்கறிகளை உண்ண வேண்டும் என நமக்குத் தெரிந்திருந்தாலும் வெகு சிலரே போதுமான காய்கறிகளை உண்கிறோம்’’ என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பொதுவாக ஒரு நாளில் 400 கிராம் அளவில் ஐந்து விதமான பழங்களை நாம் உண்ண வேண்டும். ஆனால் இங்கிலாந்தில் 18 வயதைக் கடந்த கால்வாசிப் பேர்தான் அவ்வாறு சரியாக உட்கொள்கின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள போன்மத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹார்ட்வெல் என்ற பேராசிரியர், மக்களை அதிகமாக காய்கறிகளை உண்ண வைக்கக்கூடிய திட்டங்களை வடிவமைக்கும் ‘வெஜ்ஜி ஈட்’ என்ற திட்டத்தை முன்வைக்கிறார். 

காய்கறிகளை அதிகமாக உண்ண வைப்பதற்கு ஒரே ஒரு வழிமுறை அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்லமுடியாது. ஆனால் ஒருவர் காய்கறிகளை எடுத்துக்கொள்வதற்கான வழிகளை நாம் அதிகரிக்க முடியும் என்கிறார் ஹார்ட்வெல்.

பலர் ஆரோக்கியமான உணவை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும் என நினைக்கின்றனர்.

தொடர்ந்து தூண்டி, மறைமுகமாக மக்களை காய்கறிகளை உண்ண வைப்பதில் ஹார்ட்வெல் கைதேர்ந்தவர்.

பேரங்காடிகளில் ருசிகரமான உணவின் படங்களை ஒட்டுவதன் மூலம் மக்களை பழங்கள் சார்ந்த உணவை வாங்க வைக்க முடியும். சிலர் தங்கள் நண்பர்களிடம் பெருமையாகக் கூறுவதற்காக ஆரோக்கியமான உணவை வாங்குவார்கள் என்று தெரிவிக்கிறார் ஹார்ட்வெல்.

காய்கறிகளைத் தேர்ந்தெடுக்க வைப்பது கடினமான வி‌ஷயம்தான். ஆனால் இந்த ஆய்வில் காய்கறிகளுக்கு கவர்ச்சிகரமான பெயர்களை வழங்குவதன் மூலம் அதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும்  என தெரியவந்துள்ளதாகர் ஹார்ட்வெல் கூறுகிறார்.

Next Story