அங்கன்வாடி பணியாளர் பணிக்கு நேர்முக தேர்வு: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் பரபரப்பு


அங்கன்வாடி பணியாளர் பணிக்கு நேர்முக தேர்வு: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Sept 2017 3:00 AM IST (Updated: 9 Sept 2017 6:10 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் அங்கன்வாடி பணியாளர் பணிக்கான நேர்முக தேர்வு நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள பெண்கள் குவிந்ததால் கலெக்டர் அலுவலகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

நெல்லை,

நெல்லையில் அங்கன்வாடி பணியாளர் பணிக்கான நேர்முக தேர்வு நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள பெண்கள் குவிந்ததால் கலெக்டர் அலுவலகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

அங்கன்வாடி பணியாளர் பணி

நெல்லை மாவட்டத்தில் 628 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு வேலை வேண்டுவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு நேர்முக தேர்வுக்கான அழைப்பாணை தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

அழைப்பாணை அனுப்பியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி மற்றும் நேர்முக தேர்வு நேற்று தொடங்கியது. முதல் கட்டமாக 3 ஆயிரம் பெண்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

பெண்கள் கூட்டம் அலைமோதியது

நேற்று காலை 9 மணி முதலே பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வரத் தொடங்கினர். சிலர் கைக்குழந்தையுடன் வந்து இருந்தனர். பல பெண்கள் தங்கள் கணவர் மற்றும் உறவினர்களுடன் வந்து இருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின்படி 15 குழுக்கள் அமைக்கப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் பெண்களிடம் சான்றிதழ்களை சரிபார்த்தனர். கல்வி, இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டன. இந்த பணியானது பஞ்சாயத்து யூனியன் அளவில் தனித்தனியாக சரிபார்க்கப்பட்டன. மாலையில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நிறைவடைந்தது.

நாளை மறுநாள்

வருகிற 12–ந் தேதி வரை (நாளை மறுநாள்) சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடக்கிறது. அதன்பிறகு விண்ணப்பங்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையிலான குழுவால் பரிசீலிக்கப்படும். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள 21 வட்டாரங்களில் காலியாக உள்ள குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு நேற்று முன்தினம் நேர்முக தேர்வு தொடங்கியது. நேற்று 2–வது நாளாக தேர்வு நடந்தது. இதிலும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

நேற்று ஒரே நேரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டதால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story