அரசியல் ஆதாயம் தேடவே கிருஷ்ணசாமி பேசி வருகிறார் தெகலான் பாகவி குற்றச்சாட்டு


அரசியல் ஆதாயம் தேடவே கிருஷ்ணசாமி பேசி வருகிறார் தெகலான் பாகவி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Sept 2017 2:00 AM IST (Updated: 9 Sept 2017 6:53 PM IST)
t-max-icont-min-icon

அனிதா மரணத்தை கொச்சைப்படுத்தக்கூடாது என்றும், அரசியல் ஆதாயம் தேடவே புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசி வருகிறார்.

நெல்லை,

அனிதா மரணத்தை கொச்சைப்படுத்தக்கூடாது என்றும், அரசியல் ஆதாயம் தேடவே புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசி வருகிறார் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நீட் தேர்வு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் ஜனாதிபதியின் ஒப்புதல் பெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்தது. இதில் தமிழக மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என்பது வேதனை அளிக்கக்கூடியது.

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணத்துக்கு மத்திய– மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். அனிதாவின் தற்கொலையை கொச்சைப்படுத்தக்கூடாது. அவரது மரணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்து வருகிறார். இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் அரசியல் ஆதாயத்துக்காகவே இதுபோல் பேசி வருகிறார்.

நிரந்தர விலக்கு

நீட் தேர்வை எதிர்த்து அரசியல் கட்சிகளும், கல்லூரி மாணவர்களும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழக அரசு போராட்டங்களை ஒடுக்க நினைக்கக் கூடாது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலை வருகிற அக்டோபர் 17–ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசல் ஓட்டுனர் உரிமம்

அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் அசல் ஓட்டுனர் உரிமம், வாகன உரிமம் மற்றும் இன்சூரன்சு உரிமம் கட்டாயம் வைத்து இருக்க வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அசல் உரிமங்களை வைத்து இருப்பது என்பது நடைமுறைக்கு ஒத்து வராது. எனவே அரசின் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு தெகலான் பாகவி கூறினார்.

பேட்டியின் போது நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் முபாரக், துணை தலைவர் சாகுல் அமீது, பொது செயலாளர் கனி, மாவட்ட செயலாளர் ஹயாத் முகமது, பொருளாளர் மஜீத் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story