செங்கோட்டையில் வடிவேலு சினிமா பாணியில் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
செங்கோட்டையில் நடிகர் வடிவேலு சினிமா பாணியில் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி நடந்தது.
செங்கோட்டை,
செங்கோட்டையில் நடிகர் வடிவேலு சினிமா பாணியில் டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி நடந்தது.
கடையின் பூட்டு உடைப்புநெல்லை மாவட்டம் செங்கோட்டை–வல்லம் சாலையில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் இந்த கடையில் எப்போதும் அளவுக்கு அதிகமான கூட்டம் இருக்கும். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு டாஸ்மாக் ஊழியர்கள் கடையை அடைத்து விட்டுச் சென்றனர். அதற்கு பின்னர் யாரோ மர்மநபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். உள்ளே பணம் இருக்கும் கல்லா பெட்டியை உடைத்து பார்த்துள்ளனர். அதில் பணம் ஏதும் இல்லை என்றதும், தேவையான அளவு வரை விடிய விடிய உள்ளேயே இருந்து மது குடித்துள்ளனர். காலி பாட்டில்களை கடையின் உள்ளே போட்டுள்ளனர்.
கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதை அறிந்த மர்மநபர்கள், தங்களை கண்டுபிடித்து விடக்கூடாது என நினைத்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கையும் கையோடு தூக்கிச் சென்று விட்டனர்.
நேற்று காலை 11 மணிக்கு வழக்கம் போல் கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கல்லா பெட்டியில் பணம் வைக்காததால் ஓரளவு மன நிம்மதி அடைந்தனர்.
போலீசார் விசாரணைஇதுகுறித்த தகவல் அறிந்த செங்கோட்டை போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள், பாருக்கு அடிக்கடி வந்து செல்லும் திருடர்களா அல்லது வெளியூரை சேர்ந்தவர்களா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கடையில் மதுவாங்க வரும் மதுப்பிரியர்களின் செல்போன்கள், பணம், பர்ஸ், பை ஆகியன அடிக்கடி கொள்ளை போவதும், கொள்ளை கும்பலை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதும் குறிப்பிடத்தக்கது.