பூந்தமல்லியில் மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலி


பூந்தமல்லியில் மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 10 Sept 2017 5:30 AM IST (Updated: 10 Sept 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லியில் மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி கருணாகரன் நகர், பால் மோகன்தாஸ் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்(வயது 41). பெயிண்டர். இவருடைய மகன் சாம்ஜெபதுரை(7). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த சில தினங்களாக சாம்ஜெபதுரை, மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதற்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான்.
ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறுவன் சாம்ஜெபதுரை, நேற்று பரிதாபமாக உயிரிழந்தான்.

இதனை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர் ரவிக்குமார் தலைமையில் பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நகராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த குப்பைகளை அகற்றும் டிராக்டரை வழி மறித்து, நகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

பூந்தமல்லி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. மழை காலங்களில் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இதனை உரிய நேரத்தில் அகற்றப்படாததால் கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகிறது. தொற்றுநோய் பரவாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் பிளச்சிங் பவுடர், மருந்துகள் எதுவும் தெளிக்கப்படவில்லை.

இதனால் மர்ம காய்ச்சல் பரவி தற்போது சிறுவன் பலியாகி விட்டான். மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நகராட்சிக்குஉட்பட்ட பகுதிகளில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நகராட்சி அலுவலக வளாகத்தில் குப்பைகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story