வடலூரில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கக்கோரி பொது மக்கள் சாலை மறியல்


வடலூரில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கக்கோரி பொது மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Sept 2017 4:45 AM IST (Updated: 10 Sept 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

வடலூரில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கக்கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வடலூர்,

வடலூரில் உள்ள கடலூர் ரோட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கடலூர் சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த செல்லியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல முறை புகார் அளித்த பின்பும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையோரத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றி அங்கு கழிவுநீர் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த செல்லியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று வடலூரில் உள்ள கடலூர் சாலையில் ஒன்று திரண்டனர்.

பின்னர் அவர்கள் கழிவு நீர் தேங்குவதை தடுக்க கடலூர் சாலையோரத்தில் கழிவு நீர் வாய்க்காலை உடனே அமைக்க வேண்டும் என்று கூறி அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கழிவு நீர் வாய்க்கால் அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதனை ஏற்று பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் சாலையில் சுமார் 30 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story