கல்வராயன் மலைப்பகுதியில் கனமழை கல்படை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது


கல்வராயன் மலைப்பகுதியில் கனமழை கல்படை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது
x
தினத்தந்தி 10 Sept 2017 4:30 AM IST (Updated: 10 Sept 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கல்படை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது. இதில் கோமுகி அணையின் நீர்மட்டம் 33 அடியாக உயர்ந்தது.

கச்சிராயப்பாளையம்,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்றி ஏற்பட்டுள்ள காரணத்தினால் தமிழகம் மற்றும் புதுச்சேரிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, கச்சிராயப்பாளையம் பகுதியில் இந்த மழை நீடித்தது.

இதில் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழையாக கொட்டியது. மலைப்பகுதியில் இருந்து வரும் கல்படை, பொட்டியம், மல்லிகை பாடி ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து கோமுகி அணைக்கு வந்தது. அதாவது நேற்று முன்தினம் இரவு அணைக்கு இந்த ஆறுகளில் இருந்து விநாடிக்கு 1,500 கன அடி நீர் வீதம் வந்தது.

இதனால் கல்படை கிராமத்தில் இருந்து பரங்கிநத்தம் கிராமத்துக்கு செல்லும் வழியில் கல்படை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கியது. அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை நீர் வரத்து படிப்படியாக குறைந்தது. பின்னர் வாகனங்கள் வழக்கம் போல் சென்று வந்தன.

நேற்று மாலை நிலவரப்படி கோமுகி அணைக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதன் மூலம் 46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணையின் நீர்மட்டம் தற்போது 33 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 46 அடி என்ற போதிலும், பாதுகாப்பு கருதி 44 அடி வரைக்குமே தண்ணீர் தேக்கி வைக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

கடந்த 6–ந்தேதி அணையின் நீர்மட்டம் 29 அடியாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து இருக்கிறது. இதனால் அணையின் மூலம் பாசனம் வசதி பெறும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து இருக்கிறார்கள்.


Next Story