காவல் துறையில் சட்ட நுணுக்கத்துடன் பணியாற்ற இப்போது ஆள் இல்லை நீதிபதி பேச்சு


காவல் துறையில் சட்ட நுணுக்கத்துடன் பணியாற்ற இப்போது ஆள் இல்லை நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 10 Sept 2017 4:15 AM IST (Updated: 10 Sept 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

முன்பெல்லாம் இருந்தது போல் காவல் துறையில் சட்ட நுணுக்கத்துடன் பணியாற்ற இப்போது ஆள் இல்லை என்று ஐகோர்ட்டு நீதிபதி மதிவாணன் பேசினார்.

திருச்சி,

தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாவட்ட தலைவர் நல்ல சங்கி தலைமை தாங்கினார். தீனதயாளன் வரவேற்று பேசினார். பொதுச்செயலாளர் ஜெயராமன் ஆண்டறிக்கை படித்தார். சங்கத்தின் மாநில தலைவர் சக்திவேலு வாழ்த்தி பேசினார்.

இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி.மதிவாணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஓய்வு என்பது நாம் செய்யும் பணிக்குத்தான். இதர வாழ்வியல்களுக்கு ஓய்வு கிடையாது. பணிக்கு சேர்ந்த நாளே ஓய்வு தேதியும் நிர்ணயம் செய்யப்பட்டு விடுகிறது. எனவே பணிக்காலத்தில் இன்முகத்துடன் எல்லோரிடமும் அனுசரணையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை உயர் அதிகாரிகள் உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமும் ஒரு நாள் ஓய்வு பெறப்போகிறோம் என்ற உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.

காவல்துறையில் புலன் விசாரணை என்பது மிக முக்கியமான சட்ட நுணுக்கங்கள் நிறைந்த பணியாகும். முன்பெல்லாம் தலைமை காவலர் பதிவு செய்யும் வழக்கு கூட உச்சநீதிமன்றம் வரை நிலைத்து நிற்கும் என்பார்கள். ஆனால் இப்போது அதுபோல் பணியாற்ற காவல் துறையில் ஆள் இல்லை. புலன் விசாரணையில் சிறிய இடைவெளி இருந்தாலும் அது குற்றவாளிக்கு சாதகமாக தீர்ப்பு எழுத வாய்ப்பாகி விடும். கொலை வழக்குகளில் சாட்சிகள் விசாரணை மிக முக்கியமானதாகும்.

காவல்துறையினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. விடுப்பு, உரிய நேரத்தில் ஓய்வு எடுத்துக்கொள்ள முடியாமல் போவதால் குடும்பம், மனைவி குழந்தைகளை சரியாக கவனிக்க முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். ஓய்வு பெற்ற பின்னர் சோர்ந்து விடக்கூடாது. வீட்டில் முடங்கி போய் விடாமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜூலை மாதம் முதல் அகவிலைப்படியை வழங்கியது போல், மாநில அரசு ஊழியர்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரே பதவி, ஒரே ஊதியம் என்று வழங்கியது போல் தமிழக அரசிலும் சமச்சீர் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் தங்கும் விடுதி வசதி அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க மாநகர செயலாளர் சிவ. நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story