வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் பெற கூட்டம் அலைமோதுகிறது


வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் பெற கூட்டம் அலைமோதுகிறது
x
தினத்தந்தி 10 Sept 2017 4:30 AM IST (Updated: 10 Sept 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை- பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் பெற கூட்டம் அலைமோதுகிறது. 2 அலுவலகங்களிலும் சேர்த்து 6 நாளில் 4 ஆயிரத்து 351 பேர் பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த 6-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. முதலில் செப்டம்பர் 1-ந்தேதி அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் என அரசு அறிவித்தது.

அதன் பின்னர் இது தொடர்பாக வழக்கை விசாரித்த கோர்ட்டு 6-ந்தேதி முதல் அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் என அறிவித்தது. அதன்படி அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி செல்லுதல் போன்ற 6 வகையான போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் அசல் ஓட்டுனர் உரிமத்தை கேட்டு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஓட்டுனர் உரிமங்களை பெற பதிவு செய்வதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. கடந்த 1-ந்தேதி முதல் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் போக்குவரத்து துறையில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்கள் விடுமுறை நாளான சனிக்கிழமை இயங்கும் என அரசு அறிவித்தது.

அதன்படி நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இயங்கின. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் ஆகிய 2 இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களும், பட்டுக்கோட்டையில் பகுதி அலுவலகமும் இயங்கி வருகின்றன. இந்த 3 அலுவலகங்களும் நேற்று வழக்கம் போல இயங்கின.

தஞ்சை, பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேற்று வழக்கம் போல ஓட்டுனர் உரிமம் பெற எல்.எல்.ஆர். (ஓட்டுனர் பழகுனர் உரிமம்) பதிவு செய்வதற்காக ஏராளமானோர் வந்தனர். தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வழக்கமாக தினமும் 30 பேரும், பட்டுக்கோட்டை அலுவலகத்தில் 15 முதல் 20 பேரும் எல்.எல்.ஆர். பதிவு செய்வதற்காக வருவார்கள்.

ஆனால் கடந்த 1-ந்தேதி முதல் தஞ்சை அலுவலகத்தில் தினமும் சராசரியாக 600-க்கும் மேற்பட்டவர்களும், பட்டுக்கோட்டை அலுவலகத்தில் 90-க்கும் மேற்பட்டவர்களும் பதிவு செய்து வருகிறார்கள். கடந்த 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை (சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) 6 நாட்களில் தஞ்சை அலுவலகத்தில் 3 ஆயிரத்து 765 பேரும், பட்டுக்கோட்டை அலுவலகத்தில் 586 பேரும் என மொத்தம் 4 ஆயிரத்து 351 பேர் பதிவு செய்துள்ளனர்.

நேற்று தஞ்சை அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி முக்கண்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேந்திரன், பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேல் ஆகியோர் வழக்கம் போல் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு பதிவு செய்தனர்.

இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி முக்கண்ணன் கூறுகையில், “1-ந்தேதிக்கு பிறகு வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தஞ்சை அலுவலகத்தில் 1-ந்தேதி முதல் 700 பேருக்கு புதிதாக ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 765 பேர் புதிதாக ஓட்டுனர் உரிமம் பெற பதிவு செய்துள்ளனர். ஓட்டுனர் உரிமம் காணாமல் போனவர்கள் 16 பேரும் விண்ணப்பித்துள்ளனர். பட்டுக்கோட்டை அலுவலகத்தில் 141 பேருக்கு புதிதாக ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. 586 பேர் புதிதாக ஓட்டுனர் உரிமம் பெறவும், காணாமல் போனவர்கள் 2 பேரும் விண்ணப்பித்துள்ளனர். கூட்டத்தை சமாளிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன”என்றார். 

Related Tags :
Next Story