பாஸ்போர்ட் சேவை மையத்தில் சிறப்பு மேளா 200 பேர் விண்ணப்பித்தனர்
புதுவை பாஸ்போர்ட் சேவை மையத்தில் சிறப்பு மேளா நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விண்ணப்பித்தனர்.
புதுச்சேரி,
சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அசோக் பாபு உத்தரவின்பேரில் புதுவை பாஸ்போர்ட் சேவை மையத்தில் சிறப்பு பாஸ்போர்ட் மேளா நேற்று நடந்தது. இந்த மேளாவில் கலந்துகொள்ள 200 பேர் விண்ணப்பித்தனர்.
இணையதளம் மூலம் அவர்கள் அனைவருக்கும் தனித்தனி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களுடன் வந்து பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தனர்.
விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை புதுவை பாஸ்போர்ட் சேவை மைய தலைவர் பரிதுனிஷா சரிபார்த்து பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுத்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘இந்த முகாமில் புதுவை, காரைக்கால், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும். புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தளவர்களுக்கு போலீஸ் விசாரணை முடிந்து 15 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும்’ என்றார். அப்போது கண்காணிப்பாளர் சந்திரசேகர் உடனிருந்தார்.