கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவி பரிதாப சாவு


கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவி பரிதாப சாவு
x
தினத்தந்தி 10 Sept 2017 4:45 AM IST (Updated: 10 Sept 2017 3:38 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கணவனும், மனைவியும் கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆட்டையாம்பட்டி,

சேலம் சிவதாபுரம் அய்யாவு நகரைச் சேர்ந்தவர் அன்புமணி (வயது 60). ஓட்டல் நடத்தி வந்தார். இவரது மனைவி கமலா (55).

நேற்று பிற்பகல் 3 மணியளவில் அன்புமணியும், கமலாவும் மோட்டார் சைக்கிளில் ஏரிக்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அன்புமணி மோட்டார் சைக்கிளை ஓட்டினார். கமலா பின்புறம் அமர்ந்து இருந்தார்.

சீரகாபாடி அருகே வந்தபோது அந்த வழியாக வந்த கார் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அன்புமணியும், கமலாவும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து பற்றி அறிந்ததும் ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

விபத்து ஏற்படுத்திய காரை டிரைவர் நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story