எழுத்தாளர் கிரீஷ் கார்னட் உள்பட 17 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டு கொலை செய்யப்பட்டதால் எழுத்தாளர் கிரீஷ் கார்னட் உள்பட 17 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு,
கவுரி லங்கேஷ் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. கவுரி லங்கேசை சுட்டு கொன்ற மர்மநபர்களை கைது செய்ய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு விசாரணை குழுவினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடகத்தில் கடந்த 2015–ம் ஆண்டு தார்வார் நகரில் வசித்து வந்த எழுத்தாளர் கலபுரகி சுட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதும், தற்போது பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு இருப்பதும் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் அச்சுறுத்தலை உருவாக்கி இருக்கிறது. எழுத்தாளர் கலபுரகி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து பேராசிரியர் சந்திரசேகர் பட்டீல், கே.எஸ்.பகவான் உள்பட சிலருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.இந்த நிலையில், தற்போது கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு இருப்பதால் கர்நாடகத்தில் உள்ள பிரபல எழுத்தாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உளவுத்துறை, மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி எழுத்தாளர் கிரீஷ் கார்னட், பரகூர் ராமசந்திரப்பா, பட்டீல் புட்டப்பா மற்றும் சன்னவீரா கனவி உள்பட 17 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story