கூடலூர், ஊட்டி பகுதியில் வெள்ளம் சேதம் ஏற்படும் இடங்கள் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு
கூடலூர், ஊட்டி பகுதிகளில் வெள்ள சேதம் ஏற்படும் இடங்களில் அதிகாரிகள் குழு பார்வையிட்டு ஆய்வு நடத்தியது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண்சரிவு, வெள்ள சேதம் ஏற்பட்டது. மேலும் ஆற்றுவாய்க்கால்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடலூர்– கேரள சாலையில் மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் விழுந்து சுமார் 15 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மழை காலத்தில் வெள்ள சேதம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதையொட்டி வெள்ள சேதம் ஏற்படும் இடங்களை பார்வையிட்டு உரிய ஆய்வு நடத்தி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் குழு நீர்நிலைகள், வெள்ள அபாயம், நிலச்சரிவுகள் ஏற்படும் இடங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கூடலூர் தாலுகா பகுதியில் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், நகராட்சி பொறியாளர் சண்முகம், தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்புசாமி, வருவாய் ஆய்வாளர் சதீஷ் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் காசிம்வயல், வேடன்வயல், தட்டக்கொல்லி, ராஜகோபாலபுரம், புத்தூர்வயல் தேன்வயல் உள்ளிட்ட இடங்களில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, அனைத்து நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் செல்லும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வாய்க்கால்களில் கொட்டப்படும் கழிவுகள் அடைத்து விடுவதால் மழைநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுகிறது. இதனால் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் கழிவு பொருட்களை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஊட்டி தாசில்தார் மகேந்திரன் தலைமையில் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ரவி, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் குழு நேற்று கிரண்டாப் காலனி, அன்பு அண்ணா நகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அன்பு அண்ணா நகரில் 4 மரங்கள் வீடுகளின் மீது விழும் அபாயத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மரங்களை வெட்டி அகற்ற அதிகாரிகள் குழு சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிட்டு உள்ளது.
அது மட்டுமின்றி கடந்த 2009–ம் ஆண்டு பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களான நொண்டிமேடு, தலையாட்டிமந்து, வேல்யூ, கிரண்டாப்காலனி, மேரிகில் பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. வெள்ளச்சேதம் ஏற்படும் வகையில் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறதா? குடியிருப்புகளில் தண்ணீர் புகும் அபாய நிலை இருக்கிறதா? என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அடைப்பு உள்ள வாய்க்கால்களை தூர்வாரவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.