கோவை தமிழ்நாடு ஓட்டலில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு


கோவை தமிழ்நாடு ஓட்டலில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 11 Sept 2017 4:45 AM IST (Updated: 11 Sept 2017 12:31 AM IST)
t-max-icont-min-icon

கோவை தமிழ்நாடு ஓட்டலில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர்துரை வீட்டில் தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

கோவை,

டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் அ.தி.மு.க. அம்மா அணி கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் அ.தி.மு.க. அம்மா அணி மாநகர் மாவட்ட செயலாளர் என்.சின்னதுரை, அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சேலஞ்சர் துரை தலைமையில் நிர்வாகிகள் தமிழ்நாடு ஓட்டலுக்கு நேற்று காலை 10 மணிக்கு சென்றனர்.

அப்போது ஓட்டல் நிர்வாகம் சார்பில் ‘உங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹாலில் மின்சார கோளாறு உள்ளது. எனவே நீங்கள் வேறு எங்காவது கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்‘ என்று கூறி ஹாலுக்காக கொடுத்த முன்பணம் ரூ.2 ஆயிரத்தை திருப்பி கொடுத்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தினகரன் ஆதரவாளர்கள், கடைசி நேரத்தில் ஏன் இப்படி சொல்கிறீர்கள்?. எங்களுக்கு இடம் கொடுக்க கூடாது என்று யாராவது கூறினார்களா? என்று கேட்டு ஓட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் காட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் தினகரன் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பின்னர் தினகரன் ஆதரவாளர்களை போலீசார் திருப்பி அனுப்பினார்கள்.

அதை தொடர்ந்து தமிழ்நாடு ஓட்டலில் இருந்து வெளியே வந்த தினகரன் ஆதரவு நிர்வாகிகள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து ஆவாரம்பாளையத்தில் உள்ள அமைப்பு செயலாளர் சேலஞ்சர்துரை வீட்டில் கூட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்து அங்கிருந்து அனைவரும் அவருடைய வீட்டுக்கு புறப்பட்டனர். சிறிது நேரத்தில் நிர்வாகிகளும், தொண்டர்களும் சேலஞ்சர் துரை வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

அங்கு அ.தி.மு.க. அம்மா அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கோவை எம்.பி. ஏ.பி.நாகராஜன், அம்மா அணி மாநகர் மாவட்ட செயலாளர் என்.சின்னதுரை, அண்ணா கட்டுமான தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஜி.முருகேசன், நிர்வாகிகள் அலாவுதீன், வீடியோ சண்முகம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் சேலஞ்சர் துரை நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா சிறையில் இருப்பதால் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இந்த நிலையில் கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்த முடிவு செய்து சுற்றுலா துறைக்கு சொந்தமான தமிழ்நாடு ஓட்டலில் ஹால் முன்பதிவு செய்து அதற்காக ரூ.2 ஆயிரம் முன்பணம் செலுத்தியிருந்தோம். இந்த நிலையில் கூட்டம் நடத்துவதற்காக நாங்கள் சென்ற போது எங்களுக்கு கூட்டம் நடத்த ஹால் கொடுக்க மறுத்து விட்டனர்.

மேலே இருந்து யாரோ சொன்னதால் ஹால் கொடுக்க மறுத்து விட்டதாக ஓட்டல் ஊழியர்கள் கூறினார்கள். நாங்கள் கூட்டம் நடத்தி விடக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே கடைசி நேரத்தில் மறைமுகமாக அனுமதி மறுத்துள்ளனர். அவர்கள் யார்? என்பது எல்லோருக்கும் தெரியும். அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். சூழ்நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.

12-ந் தேதி (நாளை) பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். பொதுக்குழுவை பொதுச் செயலாளர் தான் கூட்ட முடியும். அவர் அறிவிக்காத நிலையில் நடப்பது பொதுக்குழு கூட்டமே இல்லை. கோவை மாவட்டத்தில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் எங்கள் அணி யில் தான் உள்ளனர். அவர்கள் 12-ந் தேதி நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள்.

விரைவில், டி.டி.வி.தினகரன் தலைமையில் தான் கட்சியும், ஆட்சியும் நடக்கும். தற்போது கோவை மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னதுரை விரைவில் தினகரனை சந்திப்பார். அவருடைய அறிவுறுத்தலின்பேரில் அ.தி.மு.க. கட்சி அலுவலகமான இதய தெய்வம் மாளிகைக்கு சென்று பொறுப்பேற்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவத்தையொட்டி கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story