தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்று பேச்சுவார்தையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
பொள்ளாச்சி,
வால்பாறை அருகே உள்ள வாகமலை, ஹைபாரஸ்ட் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளாக வைப்பு தொகை கட்டாமலும், பணிக்கொடை தராமலும், தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை தேயிலை தோட்ட நிறுவனம் செய்து கொடுக்காமல் உள்ளது.
இதுகுறித்து பொள்ளாச்சி– கோவை ரோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் தேயிலை தோட்ட நிர்வாகத்தினருடன், அனைத்து கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது, எஸ்டேட் பகுதிகளில் பல ஆண்டுகளாக சரி செய்யப்படாமல் கிடக்கும் சாலைகளை சீரமைக்க வேண்டும். எஸ்டேட் நிர்வாகங்களின் சாலையை நகராட்சிக்கு தானமாக வழங்கி, சீரமைக்க வேண்டும். 2003–ம் ஆண்டு முதல் 2007–ம் ஆண்டு வரையில் உள்ள போனஸ் நிலுவை தொகை வழங்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி மற்றும் மருத்துவ வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும். 1998–ம் ஆண்டில் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட சம்பள ஒப்பந்தத்தில் உள்ள நிலுவை தொகைகளை வழங்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு குடிநீர் தினமும் வழங்கவும், பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்றி புதுப்பித்து தர வேண்டும். தொழிலாளர்களின் குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயம் உள்ளதால், உடனடியாக தொழிலாளர்களின் குடியிருப்புகளை பராமரித்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையில் வாகமலை, ஹைபாரஸ்ட் தேயிலை தோட்ட நிர்வாகங்களின் மேலாண்மை இயக்குனர் லாலு பென்சாலி, தேயிலை இலை வாங்கும் கேரளாவை சேர்ந்த பாரியா குரோ நிறுவனத்தின் துணை தலைவர் மகேஷ் நாயர், தொழிற்சங்க நிர்வாகிகள் வால்பாறை அமீது (அ.தி.மு.க.), கருப்பையா (ஐ.என்.டி.யூ.சி.), மோகன் (ஏ.ஐ.டி.யூ.சி.), சவுந்திரபாண்டியன் (தி.மு.க.), அருணகிரி பாண்டியன் (காங்கிரஸ்) மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.