எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்ட கவர்னர் உத்தரவிட வேண்டும்: முத்தரசன் பேட்டி


எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்ட கவர்னர் உத்தரவிட வேண்டும்: முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 11 Sept 2017 4:30 AM IST (Updated: 11 Sept 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்ட கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று சங்கராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

சங்கராபுரம்,

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு நடை பயண பிரசார நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் திருப்பதி, கோவிந்தராஜ், பொருளாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டக்குழு சையத்கரீம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் சவுரிராஜன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் அப்பாவு ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்திய, மாநில அரசின் தவறான போக்குகளை கண்டித்து மக்கள் சந்திப்பு நடைபயண பிரசாரம் கடந்த 1–ந்தேதி திண்டுக்கல்லில் தொடங்கப்பட்டது. இந்த பிரசார இயக்கத்திற்கு 10 ஆயிரம் குழுக்கள் நியமிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் பொதுமக்களிடையே துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை பாரதீய ஜனதா மூலம் தமிழக உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசு மத்திய அரசிடம் அடிபணிந்து செயல்படுகிறது. ‘நீட்’ நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது சம்பந்தமாக 6 மாதமாக தமிழக மக்கள் ஒருமித்த குரலுடன் போராடி சட்டசபையில் 2 மசோதாக்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

 ஆனால் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என கூறிவிட்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் கற்பிக்க அரியலூர் மாணவி அனிதா ‘நீட்’ தேர்வுக்காக தனது வாழ்க்கை பயணத்தையே முடித்துகொண்டார். மத்திய அரசின் கொத்தடிமையாக மாநில அரசு உள்ளது.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என தினகரன் தனது ஆதரவாளர்களான 21 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தமிழக கவர்னரிடம் தனித்தனியாக மனு கொடுத்து உள்ளார். எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும். இதற்கு உத்தரவிடும் அரசியலமைப்பு கடமை கவர்னரிடம் உள்ளது. அவர் அதை செய்யாமல் இருந்து வருகிறார். பாரதீய ஜனதா உத்தரபிரதேசம், குஜராத் போன்று தமிழகத்திலும் தனது பலத்தை பெருக்கி கொள்ளலாம் என நினைத்து வருகின்றது. அது நடக்காது. உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியை மக்கள் தோற்கடிப்பார்கள் என்பதால் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story