100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு கேடயம் முதன்மை கல்வி அதிகாரி வழங்கினார்


100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு கேடயம் முதன்மை கல்வி அதிகாரி வழங்கினார்
x
தினத்தந்தி 11 Sept 2017 4:15 AM IST (Updated: 11 Sept 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் சென்ற கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திருச்சியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. திருச்சி மாநகர அறிவியல் இயக்க தலைவர் மனோகர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.

விழாவில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 165 பள்ளிகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

அரசு பள்ளிகளில்தான் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றியும், சமூக மாற்றங்களுக்காக செய்ய வேண்டிய நல்ல பணிகள் பற்றியும் கல்வி போதிக்கப்படுகிறது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் தொடங்கி ஐ.எஸ்.ஆர்.ஓ. விஞ்ஞானிகள், மிகப்பெரிய மருத்துவ நிபுணர்கள், வேளாண் விஞ்ஞானிகள் வரை முக்கிய துறைகளில் சாதனை படைத்தவர்கள், படைத்துக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் தான். எனவே, அரசு பள்ளிகளில் படிப்பதை பெருமையாக கருதவேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு அரசு பல திட்டங்களை வைத்து இருக்கிறது. அதனை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை பல்கலைக்கழக டீன் பாண்டிய ராஜன், அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் சாந்தி, சாதனை படைத்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story